Monday, August 6, 2018

விதைத்திருவிழா கண்காட்சி


விதைத்திருவிழா கண்காட்சி
 
அரியலூரில் 2வது ஆண்டாக இயற்கை முறை விதைத்திருவிழா கண்காட்சி துவங்கியது. இதில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இயற்கை வேளாண் குறித்து  விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகிறது. அரியலூரில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் 2வது ஆண்டாக விதைத்திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண் கருத்தரங்கங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செம்மொழி நிறுவனர் ராமசாமி, முன்னாள் உதவி இயக்குநர் அசன்முகமது ஆகியோர் விதைத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.


இக்கண்காட்சியில் நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, அறுபதாம் குருவை மற்றும் பல்வேறு மரபு வகை நெல் விதைகள், நாட்டுகம்பு, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள், கடலை, உளுந்து, முந்திரி, நாட்டு பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள், அரிய மூலிகை செடிகள் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும், இயற்கை சாகுபடிக்கான இடுபொருட்கள், இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் மற்றும் உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் செம்பு, மரத்திலான சமையல் பாத்திரங்கள் மற்றும் கருவிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கண்காட்சியில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நாட்டு விதைகளை வாங்கிச் சென்றனர். விழாவிற்கு வந்தவர்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்க நவதானிய உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய இயற்கை ஆர்வலர்கள் விவசாயிகள் நாட்டு விதைகளை விட்டு வீரிய ரக விதைகளை பயன்படுத்துவதால் மனிதன் மற்றும் கால்நடைகள் உட்கொள்ளும் உணவில் ரசாயன பூச்சி மருந்துகள் கலக்கிறது.  இதனால் பல்வேறு நோய்களால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்


No comments:

Post a Comment